மதுரையில் ஆம்னி பஸ் ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் ஓட்டுநராக பணிபுரிந்தார். அவர், முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளில் பயணிகளை ஏற்றி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு வந்தார். அப்போது டிராவல்ஸ் ஊழியர்கள் அவரை அலுவலக ஜன்னல் கம்பியில் கைகளைக் கட்டி வைத்து தாக்கி, முறைகேடு குறித்து விசாரித்தனர். பின்னர் அவரை வேலையை விட்டு நீக்கி எச்சரித்து அனுப்பினர். இக்காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக மாட்டுத்தாவணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சில நேரம் காலியாக இருக்கும் சீட்டுகள், படுக்கைகளை இடையில் நிரப்பி அதற்கான பணத்தை வசூலித்து வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். சில டிராவல்ஸ் உரிமையாளர்கள் கணக்குக்கேட்டு கண்டிப்புடன் செயல்படுவர். இதுபோல ஒரு சம்பவத்தில்தான் பேருந்து ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவை பிற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஊழியர்களின் குழுக்களுக்கும் பகிர்ந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஓட்டு நரை வேறு தனியார் பேருந்து நிறுவனங்கள் பணியில் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும், தவறு செய்தால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்பதற்காகவும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்னி பேருந்து நிறுவன அலுவலகத்தில் போலீஸார் விசாரித்தபோது, இரவுப்பணியில் இருந்தவர்களிடம்தான் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுவரை அவர் புகார் அளிக்கவில்லை என்றும், போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE