செய்யாறு அருகே கோயில் திருவிழாவில் சிறுவன் வாயில் மது ஊற்றிய 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 11 வயது சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் கடந்த 21-ம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கிராம மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அப்போது, அந்த கிராமத்தில் வசிக்கும் 11 வயதுசிறுவனை, 4 இளைஞர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவைஊற்றியுள்ளனர்.

மதுவை ஊற்ற வேண்டாம் என்று சிறுவன் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் விடவில்லை. மேலும், அவர்களது பிடியில் இருந்து சிறுவன் தப்ப முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 இளைஞர்களும் சிறுவனை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், மதுபானம் குடிக்க வைத்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், போதையில் தள்ளாடிஉள்ளார்.

இந்த சம்பவத்தை 4 இளைஞர்களும் வீடியோவில் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம்செய்தனர். இந்த வீடியோ வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், 11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த 4 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தினர். கோயில் திருவிழாநடைபெறும் நாட்களில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மோரணம் போலீஸார், சுமங்கலி கிராமம் அம்மன் கோயில் தெருவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் செந்தில்(26), முருகன் மகன் அஜித்குமார்(25), தாங்கல் ஏரி தெருவைச் சேர்ந்த பழனி மகன் நவீன்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், 17 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE