ஆம்ஸ்ட்ராங் கொலை: வழக்கறிஞர் ஹரிகரனிடம் போலீஸார் தொடர் விசாரணை; தொழிலதிபரை மிரட்டியதாக ரவுடி சம்போ செந்தில் மீது தனி வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 16 பேர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது.

கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரை மறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு மட்டும் துல்லியமான விடை இதுவரை கிடைக்கவில்லை. மாறாக ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி, சிறையில் உள்ள ஆயுள் சிறை கைதி தலையிட்டு கொலை சம்பவத்தை மேற்பார்வை செய்தார் என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொத்தாம் பொதுவாக யூகத்தின் அடிப்படையில் பல்வேறுதகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. ஆனால், கொலைக்கான மையப் புள்ளி இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த உண்மையை கண்டறியவே கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக தற்போது போலீஸார் காவலில்எடுத்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கொலையாளிகளுக்கு பணத்தை கைமாற்றிக் கொடுத்ததாக கூறப்படும் வழக்கறிஞர் ஹரிகரனிடமும் போலீஸார் 5 நாள் காவலில் நேற்று 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கும், ஹரிகரனுக்குமான பத்தாண்டு கால நட்பு குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும்ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ததன் விவரம்? யார்? யார்? பணம்கொடுத்தார்கள் போன்ற தகவல்கள்குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு அவர் அளித்தபதில்கள் அனைத்தும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுஒருபுறம் இருக்க கொலை வழக்கு தொடர்பான அத்தனை தகவல்களையும் திரட்டி குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுப்போம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட மேலும் சிலரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

2 பேர் கைது: இந்நிலையில், சம்போ செந்தில்உட்பட 13 பேர் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸார், ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டியதாக தனி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாகவும் சம்போ செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சம்போ செந்தில் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE