‘வசூல்ராஜா’ பாணியில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 போலி தேர்வர்கள் கைது @ பிஹார்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஐந்து போலி தேர்வர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், பிஹாரில் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பட பாணியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தததாக ஐந்து போலி தேர்வர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிஆர்3 ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 19 முதல் 22 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு தேர்வு மையங்களில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் புர்பா பஜார் பகுதியில் அம்ரேஷ் குமார், முகேஷ் குமார் என்ற இருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே போல சப்ரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் அமித் குமார், பிரவீன் குமார் மற்றும் பைஜ்நாத்பூர் பகுதியில் ரூபேஷ் ஆகியோர் சிக்கினர். இவர்கள் ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் யாருக்காக ஆள்மாறாட்டம் செய்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இம்மாத தொடக்கத்தில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பிஹாரில் மூன்று பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE