தற்கொலைக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதிய கடிதம் - மதுரை போலீஸ் விசாரணை

By என். சன்னாசி

மதுரை: குழந்தைக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதியுள்ள கடிதம் சிக்கியுள்ளது. அதன் விவரம் வெளியான நிலையில், அது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

மதுரையில் கடந்த 11-ம் தேதி தனியார் பள்ளி மாணவர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநருடன் கும்பல் ஒன்று கடத்தியது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், மாணவரின் தாயார் மைதிலி ராஜலட்சுமிக்கு தொலைபேசியில் வீடியோ கால் பேசினார். அவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார். இது பற்றி தகவல் அறிந்த எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படையினர் ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண்ணை பின்பற்றி அடுத்த 3 மணி நேரத்தில் மாணவன், பால்பாண்டியை மீட்டனர். ஆனால் செக்கானூரணி அருகே இறக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியது.

இந்நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த தேனி மாவட்டம் போடி முன்னாள் காவலர் செந்தில்குமார், நெல்லை ரகுமான் பேட்டை அப்துல் காதர், சிவகிரி வீரமணி, காளிராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இச்சம்பவத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் குமார் என்பவரின் முன்னாள் மனைவி சூர்யா, அவரது நண்பர் ஐகோர்ட் மகாராஜன் தூண்டுதலின் பேரில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் மாணவர் கடத்தப்பட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரை தனிப்படையினர் தேடினர்.

இந்நிலையில், 10 நாளுக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு அருகே தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதற்கிடையில், தனது மகள் இறப்பிற்கு மைதிலி ராஜலட்சுமியே காரணம், தனது மகளிடம் உள்ள சொத்தை அபகரித்து, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி, சூர்யாவின் தாய் எஸ் எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், தற்கொலைக்கு முன் சூர்யா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “மதுரையில் கடந்த 11ஆம் தேதி மாணவர் கடத்தல் வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. தனக்கும் அச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் தொடர்புபடுத்தினார்கள் என புரியவில்லை. என்னை இவ்வழக்கில் தொடர்புபடுத்தி வெளியான செய்திகளை பார்த்தேன். அவரது கணவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளதால் நான் பணம் கேட்டேன் என பச்சை பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ-கோர்ட் மகாராஜன் மூலம் தான் எனக்கு ராஜலட்சுமி அறிமுகம். அவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் வட்டித்தொழில் உள்ளது.

தன்னிடம் ஐகோர்ட் மகாராஜன் ரூ. 60 லட்சம் கடன் வாங்கியதாக ராஜலட்சுமி சொன்னார். அது எனக்குத் தெரியாது என, நான் கூறினேன். அதற்கு மகாராஜன் ஓடிவிட்டார். நீ தான் எனக்கு பணம் தர வேண்டும். இது குறித்து எனது கணவரிடம் சொல்வேன் என, டார்ச்சர் செய்தார். பயந்து கொண்டு கணவரிடம் கூறவேண்டாம். நான் தருகிறேன் என, ஒப்புக் கொண்டேன். அதன் பின்பு சிறிது காலம் கழித்து எனக்கு பணம் தேவைப்பட்டதால் ராஜலட்சுமியிடம் பணம் கேட்டேன். அதற்கு அவர் பைபாஸ் சாலையில் உள்ள காம்ப்ளக்ஸை அடமான கடனாக வைத்து பணம் தருகிறேன் என்றார்.

ரூ.15 லட்சம் கடனாக ராஜலட்சுமியிடம் வாங்கினேன். அதற்கு வட்டி எடுத்துக்கொண்டு பணத்தை கொடுத்தார். ஜெயலிலில் இருந்து தப்பிய ஒருவரிடம் (ஐ-கோர்ட் மகாராஜன்) நான் பழகிய பாவத்திற்காக எல்லாவற்றிலும் எனது பெயரை இழுத்தார்கள். அவர் தப்பித்த சம்பவத்தன்று நான் அந்த ஊரிலே இல்லை. ஆனால், எனது பெயர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, ராஜலட்சுமி என்னிடம் மாகராஜன் வாங்கிய ரூ.60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ.15 லட்சத்திற்கு பணம் கேட்டு டார்ச்சர் செய்தார்.

வேறு வழியின்றி கடந்த ஏப்ரல் மாதம் பணம் கொடுத்தேன். அதுவும் அவருக்கு போதவில்லை. மகாராஜா பெற்ற கடன் ஒரு வருட வட்டியுடன் வேண்டுமென தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தார். ராஜலட்சுமி கைப்பட எழுதிய வட்டி நோட் என்னிடம் உள்ளது. பணம் கேட்டு டார்ச்சர் செய்ததுடன் மட்டுமின்றி ராஜலட்சுமி தனது மாமன் மகன் என ஒருவரை அழைத்து வந்தார். அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

எனக்கு கணவரும், குடும்பத்தினரும் ஆதரவில்லை என தெரிந்து அவர்கள் ரூ.60+15 லட்சம் பணத்திற்கு 1.35 கோடியை வட்டியும் முதலுமாக கேட்டு டார்ச்சர் செய்தது மட்டுமின்றி நான் எழுதிக் கொடுத்த காம்ப்ளக்ஸ் வெறும் ரூ. 80 லட்சம் தான் போகும். மீதம் பணத்தை கொடுக்கவேண்டும் என ஏமாற்றினர். நான் அவர்களிடம் இது என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது. யாரோ வாங்கிய கடனுக்கு ஏற்கனவே விளாத்திகுளத்தில் இருந்த சொத்தை ரூ.20 லட்சத்திற்கு அடமானம் வைத்து அந்த சொத்தையும் இழந்து விட்டேன் என, ராஜலட்சுமி மற்றும் அவரது மாமன் மகனி டமும் அழுதேன். அவர்கள் மனம் மாறவில்லை.

எனது சொத்துக்கான அடமான பத்திரம் ஒன்றை அவரிடம் கேட்டேன். அவர்கள் ‘ரூ.1.35 கோடி கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் எனது பியூட்டி பார்லரை எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும்’ என்றனர். இது பகல் கொள்ளை என்று கூறினேன். ராஜாவிடம் பழகிய பழக்கத்தினால் குடும்பம் மரியாதை போனது, கணவரும் பிரிந்தார். இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டேன். பெங்களூரு சென்று சமையல் கலைஞராக ஆக வேண்டும் என நினைத்து படிக்க சென்று கையில் வைத்த பணத்தை வைத்து பீஸ் கட்டினேன்.

தொடர்ந்து ராஜலட்சுமி எனது பார்லரை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டார். மேலும் அதனை ரூ.45 லட்சத்திற்கு எழுதி வாங்கியதாகவும், பார்லருக்கான மீதி பணத்தை மூன்று மாதத்தில் ரூ.35 லட்சம் திருப்பி தருவதாகவும் ராஜலட்சுமி ஒப்புக்கொண்டார். ஆனால் பணத்தை தரவில்லை. நான் ராஜலட்சுமி இடம் எனது பியூட்டி பார்லரை எனக்கு திருப்பித் தாருங்கள் எனக்கு சோறு போட யாரும் இல்லை. எனது வாழ்க்கையை அது தான் என கேட்டேன். இந்த பார்லரை வைத்தும், என்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றுவதற்காக எனது பெயரினை கடத்தல் வழக்கில் ராஜலட்சுமி சேர்த்தார் ஐயா. கடத்தலில் ஈடுபட்டவர்கள் முகம் கூட எனக்குத் தெரியாது. பெயர் தெரியாது. வேண்டும் என்றால் எனது செல்போன் உரையாடலை சோதித்துப் பாருங்கள்.

நான் எப்படி ரவுடியிடம் பழகி இருக்க முடியும்? இதில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் நீங்கள் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.பணம் தராமல் ஏமாற்றி செத்துப்போன மைதிலி ராஜலட்சுமி புருஷனுடன் என்னை தொடர்புபடுத்தி சொல்லி இருக்காங்க. அது உண்மை குறித்து அவரிடம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் இறந்து போனார். அதுபோல மகாராஜன் ஜெயிலை விட்டு ஓடிப் போன பிறகு ராஜலட்சுமியிடம் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை வீட்டிற்கு அடிக்கடி மகாராஜன் வந்தார். அது குறித்து சிசிடிவி ஆய்வு செய்தால் உண்மை தெரியும். ராஜலட்சுமி கணவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்தால் ஒரு முறை கூடவா எனது செல் போனில் அவர் பேசியிருக்க மாட்டார். கடந்த ஆண்டு எனது செல்போனை செக் செய்து பாருங்கள் குழந்தை கடத்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும்.

இரண்டு குழந்தை எனக்கும் இருக்கு. குழந்தையை பிரிந்து வாழும் வலி எனக்குத் தெரியும். ஐயா நான் படித்து செஃப் ஆக வேண்டும்... பின்பு எனது கணவர் எனது நன்னடத்தையை பார்த்து மன்னித்து ஏற்றுக் கொள்வார் என்று ஊரை விட்டு போனேன். ஐயா நான் குழந்தை கடத்தலில் செய்ததற்கு ஆதாரம் வேண்டும். எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது. நாளை நான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் எனது மானம் எனது கணவர் மானம் பெயர் திரும்ப கிடைக்குமா..? என்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா.. நீதி வேண்டும்!

முதல்வர் ஐயா. உங்கள் ஆட்சி நான் பார்த்து வருகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். ஆனால் உங்கள் வீட்டு பெண்ணாக இருப்பினும் என்னை என்றாவது ஒருநாள் சூர்யா நிரபராதி என்று மேடையில் முதல்வர் ஐயா மற்றும் உதயநிதி பிரதர் சொல்லுங்கள். எனது கணவர் ரொம்ப நல்லவர். அவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தை இடம் உனது தாய் கொஞ்சம் நல்லவள் என்று கூறுங்கள். அப்பா, ஜிஞ்சூ, டிட்டு,. ரஞ்சித் லவ் யூ... லவ் யூ... சாரி... சாரி....

மகாராஜன் வந்து உண்மையை சொன்னால் தான் தெரியும் by சூர்யா” என, உருக்கமாக குறிப்பிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதம் சூர்யா எழுதியதுதானா என கருதும், எஸ்எஸ்.காலனி காவல் துறையினர் 4 பக்க கடிதத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

மேலும்