கல்வராயன்மலையில் கள்ளச் சாராயம் ஒழிப்பு: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஐஜி தீஷா மிட்டல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்ததில் 67 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வராயன்மலையில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தில்தான் மெத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு காவல் துறை ஈடுபட்டுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடிப்படையினர் கல்வராயன்மலையில் முகாமிட்டு, தீவிர சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, சத்தியமங்கலம், பவானி, பண்ணாரி உள்ளிட்ட வனப்பகுதி முகாம்களில் பணிபுரிந்து வந்த தமிழக சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கடந்த 25 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் முகாமிட்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரில் 3 மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், நேற்று வடக்கு மண்டலஐ.ஜி. அஸ்ரா கார்க், விழுப்புரம்சரக டிஐஜி திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி ஆகியோருடன், கல்வராயன்மலை பகுதியில் நடைபெறும் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, கச்சிராயப்பாளையம், கரியாலூர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கல்வராயன்மலையில் அடர்ந்த வனப் பகுதிகளுக்குச் சென்று, கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வரும் இடங்கள், கடத்தி வரும் வழிகள் குறித்து் கேட்டறிந்தார். இதைத் தடுப்பதற்காக கல்வராயன்மலை அடிவாரப் பகுதி, சோதனைச்சாவடிகளிலும் நடைபெறும் ஆய்வுப் பணிகளையும் பார்வையிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு சிறப்பு அதிவிரைவுப் படை போலீஸார், கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, எழுத்தூர், மேல்பாச்சேரி, கொடமாத்தி, குரும்பலூர், கொட்டபுத்தூர், ஆராம்பூண்டி, வாரம், சிறுகாலூர், சேராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE