ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தபட்ட 5 செல்ஃபோன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்தக் கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக நிர்வாகி மகன் மற்றும் அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

அஞ்சலை கைதும், பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன்களும்: தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அஞ்சலை வெள்ளிக்கிழமை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பைச் சேர்ந்த அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அஞ்சலை வீட்டியிலிருந்து 5 செல்போன்கள், வங்கி புத்தகம். டேப் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கவுன்சிலர் கைது: இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்ஃபோன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செல்ஃபோன்கள் மூலமாகத்தான் திட்டம் தீட்டப்பட்டதும், கொலைக்குப் பின் செல்போன்கள் உடைத்து வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹரிதரன் அதிமுகவிலிருந்து நீக்கம்: கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் (கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE