சென்னை | 2 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 கிராம் நகைக்காக இந்த கொலை நடந்துள்ளது,

சென்னை வியாசர்பாடி வியாசர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (80). இவரது மனைவி சரோஜினி பாய் (78). இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 17-ம் தேதி மாலை, நாகராஜன் வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் சரோஜினிபாய் மயக்க நிலையில் கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த நாகராஜன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சரோஜினி பாய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி இறப்பில் சந்தேகம் அடைந்த நாகராஜன், இதுகுறித்து வியாசர்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிந்துவிசாரணையை தொடங்கினர்.

முதல்கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கொருக்குப்பேட்டை சிகரந்தபாளையம், 8-வது தெருவைச் சேர்ந்த முரளிஎன்ற ஜீவாவை பிடித்து விசாரித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு, நகைக்காக மூதாட்டியை செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர்ஒப்புக்கொண்டார். இதை யடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை நடந்தது எப்படி? - நாகராஜன், தனது வீட்டை சுத்தம் செய்வதற்காக கொருக்குப்பேட்டையை சேர்ந்த மங்கம்மா என்பவரை அழைத்துள்ளார்.

அவர் தனது மகன் முரளி என்ற ஜீவா உள்ளிட்ட சிலருடன் சென்று நாகராஜன் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது, வயதான இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட முரளி,அவர்களது வீட்டில் கொள்ளை யடிக்க திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று சரோஜினிபாய் மட்டும் வீட்டில் தனியாகஇருப்பதை அறிந்த முரளி,அவரை தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை கழற்றியுள்ளார். அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டு, ஒரு கம்மலுடன் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE