ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணி தேர்வில் ஆள்மாறாட்டம்: ம.பி. இளைஞர் கைது

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: ஆவடியில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மத்திய பிரதேச இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் துப்புரவு பணியாளர் பணிக்கு 2023 - 2024ம் ஆண்டுக்கான தேர்வு, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் குரூப் சென்டரில் நடந்து வருகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்த நிலையில், உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில், தற்போது சென்னை - திருவெற்றியூர் பகுதியில் வசித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கரண் சிங் ரத்தோர் (21) என்பவரும் பங்கேற்றார்.

அப்போது, அவரிடம் தேர்வு கண்காணிப்பு அதிகாரி சோதனை மேற்கொண்டார். அச்சோதனையில், கரண் சிங் ரத்தோரின் அடையாள அட்டையில் உள்ள புகைப்படமும், எழுத்துத் தேர்வில் பங்கேற்றவரின் புகைப்படமும் ஒத்துப் போகாததால், பயோமெட்ரிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும், கரண் சிங் ரத்தோரின் புகைப்படமும், எழுத்துத் தேர்வில் பங்கேற்றவரின் புகைப்படமும் ஒத்துப்போகவில்லை. இதனால், எழுத்துத் தேர்வை, கரண் சிங் ரத்தோருக்கு பதிலாக ஆள் மாற்றாட்டம் செய்து வேறு ஒருவர் எழுதி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து, ஆவடி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆள் சேர்ப்பு வாரிய உதவி உதவி கமாண்டண்ட் கந்தன் சத்துவன் நேற்று இரவு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கரண் சிங் ரத்தோரை கைது செய்து, அவருக்கு பதில் எழுத்துத் தேர்வை எழுதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE