கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 2 இளைஞர்களிடம் தீவிர விசாரணை

By ந.முருகவேல் 


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காரமணிக்குப்பத்தில் 3 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலீஸ்வரி (60). இதில் சுரேஷ்குமார் கடந்த 6 மாதத்துக்கு முன் உயிரிழந்து விட்டார். மூத்த மகன் சுரேந்திரகுமார் (42), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். அவரது இளையமகன் சுகந்த்குமார்(40) ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் பணி செய்துவந்தார். மாதத்தில் 15 நாட்கள் அங்கும், மீத 15 நாட்கள் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ அடிப்படையில் நெல்லிக்குப்பத்தில் தனது தாய் மற்றும் தனது மகன் நிஷாந்த் (10) ஆகியோருடன் வசித்து வந்தார்.

சுகந்த்குமார் ஊரில் இருந்து வந்திருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி காலை, பூட்டப்பட்டிருந்த இவர்களது வீட்டில் இருந்து நாற்றத்துடன், புகை வெளிவர அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தாய் கமலீஸ்வரி, மகன் சுகந்த்குமார் மற்றும் பேரன் நிஷாந்த் ஆகியோர் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஐடி ஊழியர் சுகந்த்குமார் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் ஹமீது ஆகிய இருவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சங்கர் ஆனந்தின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணம் கொலை செய்யப்பட்ட சுகந்த்குமார் தான் எனவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தன்னை, கமலேஸ்வரி அனாதை என திட்டியதால் ஆத்திரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டிலிருந்த 3 பேரையும் வெட்டிக் கொலை செய்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கொலையான 3 பேரின் உடலை எரிப்பதற்கு உதவிய சங்கர் ஆனந்த்தின் நண்பன். சாகுல் ஹமீது என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE