திண்டிவனம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 2019ல் மிட்டாய் கொடுத்து இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அதில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த 2019ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்திய போது அந்தச் சிறுமிகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

இது குறித்து பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அந்தச் சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அவர்களின் தாய் மாமாவான கஜேந்திரனும் தாத்தா துரைசாமியும் மற்றும் உறவினர்களான தீனதயாளன், அஜித் குமார், பிரபாகரன் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கும் மேலாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சிறுமியின் தாய் மாமா, தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த பிரம்மதேசம் போலீஸார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE