நடிகை கவுதமியின் நிலத்தை மோசடியாக விற்ற வழக்கு: முன்னாள் மேலாளர் அழகப்பன் கைது

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: திரைப்பட நடிகை கவுதமி மற்றும் அவரது சகோதர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கவுதமியின் முன்னாள் மேலாளர் அழகப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போஸீஸார் செவ்வாய்க்கிழமை காலையில் கைது செய்தனர்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை கவுதமி. இவருக்கும், இவரது சகோதரர் ஸ்ரீகாந்துக்கும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 3.21 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்பனை செய்ய தன்னிடம் மேலாளராக இருந்த அழகப்பன் என்பவருக்கு கவுதமியும், ஸ்ரீகாந்தும் பவர் கொடுத்துள்ளனர்.

ஆனால், அழகப்பன் தனது கூட்டாளிகள் ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மோசடியாக அந்த நிலத்தை விற்பனை செய்ததுடன், பணத்தை சரிவர கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து நடிகை கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி நடிகை கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரின் முன்னாள் மேலாளர் அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள் உள்ளிட்ட 6 பேர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்கள் மீது நடிகை கௌதமி நிலம், மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீகாந்த் நிலம் மோசடி செய்தது தொடர்பாக தனித் தனியாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து நவம்பர் 9-ம் தேதி நடிகை கவுதமி காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மோசடி செய்யப்பட்ட நிலத்தின் பத்திரங்கள், இடத்தின் மதிப்பு, எப்போது வாங்கப்பட்டது உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்ததுடன் தனது புகார் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து, தலைமறைவாக இருந்த அழகப்பன் உள்ளிட்ட இந்த வழக்கில் உள்ள அனைவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அழகப்பனை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE