எட்டயபுரம் அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கொண்ட டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.

எட்டயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நீலகண்டன், தனிப்பிரிவு தலைமை காவலர் செல்லச்சாமி மற்றும் போலீஸார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், கீழஈரால் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அணுகு சாலையில் நீண்ட நேரமாக டேங்கர் லாரி நிற்பதை கவனித்த போலீஸார், அதனை சோதனையிட்டனர். இதில், அந்த டேங்கர் லாரியில் 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக டேங்கர் லாரி ஓட்டுநர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் அலகாபூரைச் சேர்ந்த ராம்பகதூர்(39), உதவியாளர் எட்டயபுரம் அருகே வடக்கு செமபுதூரைச் சேர்ந்த அய்யனார்(37) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், எந்தவித அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து தூத்துக்குடியில் உள்ள நிறுவனத்துக்கு 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், டேங்கர் லாரியை பறிமுதல் செய்து எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இன்று காலை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மாடசாமி மற்றும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE