கேரளா: பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் பங்க் ஊழியரை கார் பானட்டில் இழுத்து சென்ற காவலர்

By செய்திப்பிரிவு

கண்ணூர்: காருக்குப் போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் பானட்டில் வைத்து இழுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த போலீஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலைய டிரைவர்கே. சந்தோஷ்குமார். இவர் அண்மையில் ஒரு பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் நிரப்ப காரில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கிலிருந்த ஊழியர் அனில், பெட்ரோல் போட்டுவிட்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்போது பணம் தர மறுத்து அனிலுடன், சந்தோஷ்குமார் வாக்கு வாதம் செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சந்தோஷ்குமார் வண்டியை வேகமாக எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மடக்க பாய்ந்த அனில், காரின் பானட் மீது விழுந்துள்ளார். ஆனால், அவரை காரிலிருந்து இறக்கி விடாமலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காரின் பானட்டிலேயே வைத்து இழுத்துச் சென்றுள்ளார் சந்தோஷ்குமார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனில், கண்ணூர் டவுன் போலீஸில் சந்தோஷ்குமார் மீது புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் டிரைவர் கே.சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸ் கமிஷனர் அஜித் குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE