என்கவுன்ட்டரில் இறந்த ரவுடி திருவேங்கடத்தின் தந்தை, சகோதரியிடம் நீதிமன்ற நடுவர் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் நேற்றுமுறைப்படி தகனம் செய்யப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இக்கொலை தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்தபொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலைக்கு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு பழிக்கு பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கூட்டாளிகளுடன் சென்று கொலை செய்ததாக பொன்னை பாலு வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கொலை தொடர்பாக மேலும் தகவல்களை திரட்ட, கைதான 10 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததோடு, முதலில் கொலைவெறி தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. மேலும், அவர் நாட்டு வெடிகுண்டுகள் உட்பட மேலும் சில ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸ் மீது தாக்குதல்: இவற்றை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் காலை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லபட்டபோது, புழல் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் அருகே தப்பி, அங்குள்ள தகர கொட்டகையில் பதுங்கினார். அங்கு ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீஸாரை சுட்டபோது எதிர் தாக்குதலில் திருவேங்கடம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா, மருத்துவமனைக்கு சென்று என்கவுன்ட்டரில் இறந்த திருவேங்கடத்தின் தந்தை கண்ணன், சகோதரி முனியம்மாள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர், நள்ளிரவு 12.30 மணியளவில் மருத்துவர்கள் பிரியதர்ஷினி, நாராயணன், ராஜேஷ் ஆகிய 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவேங்கடத்தின் உடல் நீதிமன்ற நடுவர்தீபா முன்னிலையில் தந்தைமற்றும் அக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் திருவேங்கடத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதில், அவரது உறவினர்கள் பங்கேற்க போலீஸார் அனுமதித்தனர். முன்னதாக, நீதிமன்ற நடுவர் தீபா, என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதோடு மட்டும் அல்லாமல் அங்கு வசிப்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

மற்றொரு வீடியோ: ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு பட்டாக் கத்தியுடன் தெரு வழியாக ஓடி வர, அவரை பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களில் ஒருவர் ஏற்றிச் செல்வது போன்ற வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE