தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல உள்ளூர் ஆடு வியாபாரிக்கு ரூ.5,000 கொடுத்த தீவிரவாதிகள்

By செய்திப்பிரிவு

ரியாசி: ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கடந்த ஜூன் 9-ம் தேதி, கோயிலுக்கு சென்று திரும்பிய பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்ததாக, கடந்த ஜூன் 20-ம் தேதி, உள்ளூரைச் சேர்ந்த ஆடு வியாபாரி ஹகம் தீன் என்பவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகளுக்கு உணவு, அடைக்கலம், பயண ஏற்பாடு செய்ததும், பதிலுக்கு தீவிரவாதிகள் ஹகம் தீனுக்கு ரூ.5,000 வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து விசாரணை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ஜூன் 1-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஹகம் தீனின் வீட்டு கதவைத் தட்டி, தங்களுக்கு உணவு தயார் செய்து தரும்படி கேட்டுள்ளனர். தாங்கள் காட்டில் தங்கி இருப்பதாகவும் அங்கு வந்து தங்களுக்கு உணவு தரும்படி கூறிச் சென்றுள்ளனர்.

ஜூன் 7-ம் தேதி அந்தத் தீவிரவாதிகள் மீண்டும் அவரது வீட்டுக்கு வந்து, துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட இடத்துக்கு ஹகம் தீனை அழைத்துச் சென்று அப்பகுதியில் ஒத்திகை நடத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி அவர்கள் மீண்டும் ஹகம் வீட்டுக்கு வந்து டீ அருந்தியபடி, துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினம் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல உதவுவதற்காக ஹகம் தீனுக்கு அவர்கள் ரூ.5,000 கொடுத்துள்ளனர்.

ஹகம் அளித்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளின் உருவத்தை வரைந்துள்ளோம். அவர்கள் அடர்ந்த காட்டில் பதுங்கி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE