பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது @ திருவள்ளூர்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு அரசு பள்ளி ஆசிரியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் ஆதிதிராவிட நலத்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளி மாணவிகளை ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து, கடந்த 1-ம் தேதி பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், செவ்வாப்பேட்டை ஆதிதிராவிட நலத்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளின் விசாரணை அறிக்கை, மாவட்ட ஆட்சியர் மூலம் சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 8-ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம், ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம்குமார் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் இன்று இரவு ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE