சென்னை - மங்களூரு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ நகை, ரூ.15 லட்சம் பறிமுதல்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த பரமக்குடி இளைஞரிடம் இருந்து 2.79 கிலோ தங்க நகைகளையும், ரூ.15 லட்சம் ரொக்கத்தையும் திருச்சியில் வைத்து ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இறங்கிய ஒரு பயணி, பிரதான நுழைவாயில் வழியாக வெளியில் வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி ரயில்வே பாதுகாப்பு படைப்பிரிவு (ஆர்பிஎஃப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டின், காவலர்கள் இளையராஜா, சதீஷ்குமார் ஆகியோர் அந்த பயணியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.

பையை திறந்து பார்த்த போலீசார் கோடிக்கணக்கில் நகை, மற்றும் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுகுறித்து ஆவணங்களைக் கேட்டபோது அந்த பயணி விழிக்கவே, அவரை ஆர்பிஎஃப் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரித்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காட்டுப்பரமக்குடி, மேலத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் லட்சுமணன் (34) என்பது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணம் ஆகியவற்றை சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலிலும் பின்னர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், மதுரையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்ப்ப்பதாகச் சொன்ன அந்த நபர், தனது மாமா சென்னையிலிருந்து மதுரைக்கு நகை, பணத்தை கொண்டு செல்லுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவருடைய மாமா யார் என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

அவர் கொண்டு வந்த நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து, ஆர்பிஎஃப் போலீசார், இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி வருமான வரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா, ஜிஎஸ்டி இணை ஆணையர் ஜானகி ஆகியோர் நேரில் வந்து நகை, பணம் ஆகியவற்றை பரிசோதித்து, எடை போட்டுப் பார்த்தனர். அதில் மொத்தம் 2 கிலோ 796.40 கிராம் நகையும் ரூ.15 லட்சம் பணமும் இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.04 கோடி.

இதையடுத்து நகை, பணம் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கொண்டு வந்த நகை, பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்கிறார்? ஹவாலா பணமா என்று பல்வேறு கோணங்களில் ஆர்பிஎஃப் மற்றும் வருமான வரித் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE