விக்கிரவாண்டி தொகுதியில் சாராயம் குடித்த 6 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: விற்பனை செய்த நபர் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில், புதுச்சேரி சாராயத்தை வாங்கி வந்துகுடித்த 6 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இன்று இரவு வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினமான ஜூலை 13-ம் தேதியும் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ளது. இந்த தொகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள சூழலில், புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

இதேபோல, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, கஞ்சனூர் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து, நேற்று முன்தினம் இரவுதனது நண்பர்களுடன் குடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பூரிகுடிசை கிராமத்தைச்சேர்ந்த சக்திவேல், காணிக்கைராஜ், பாபு, ராஜா, பிரகாஷ், பிரபுஆகிய 6 பேர் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களில் சக்திவேல் என்பவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 5 பேரும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், வீடுதிரும்பினர். இந்த 5 பேரும் பயத்தால் சிகிச்சைக்கு வந்ததாகவும், அவர்களுக்கு பாதிப்பு எதுவுமில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்து, விற்பனை செய்த பிரபுவை கஞ்சனூர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE