அதிகாரி போல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: ம.பி சென்று 3 பேரை கைது செய்த கோவை போலீஸ்!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: காவல் துறை அதிகாரிகளை போல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவரை, மத்தியப் பிரதேசத்துக்குச் சென்று, கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

கோவை ராம்நகரில் உள்ள, பேரநாயுடு லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (75). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த ஜூன் மாதம் ஒரு புகார் அளித்தார். அதில், “கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி, என்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், மும்பை பாந்தரா காவல் நிலையத்திலிருந்து காவல்துறை அதிகாரியான வினய்குமார் சவுத்ரி என்பவர் பேசுவதாகவும், ராஜ்குந்தரா என்ற மோசடி நபர், எனது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, மும்பையில் வங்கிக் கணக்கு தொடங்கி, பல சிம்கார்டுகளை வாங்கி, பல கோடி மோசடி செய்திருப்பதாகவும், அவ்வழக்கில் என் மீது வழக்குப்பதிந்து என்னை கைது செய்ய போவதாகவும் தெரிவித்தார்.

மறுநாள் அவரது உயரதிகாரி எனக்கூறிக் கொண்டு, ஆகாஷ் குல்ஹரி என்பவர் என்னிடம் பேசினார். கைதிலிருந்து தப்பிக்க எனது வங்கியில் உள்ள பணத்தை உடனே அனுப்ப வேண்டும் என்றார். நான் ரூ.67 லட்சத்தை அந்நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினேன். பின்னர், மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், ரூ.10 லட்சம் தொகையை மாற்றி அனுப்ப நடவடிக்கை எடுத்தேன். அப்போது வங்கி அதிகாரிகளிடம் பேசினேன். அதன் பின்னரே, மர்மநபர்கள் போலீஸார் எனக்கூறி மிரட்டி பணம் வசூலித்துள்ளனர் என்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,”எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகேயுள்ள குணா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் சர்மா(23), முகுல் சந்தல்(24), அனில் ஜாதவ் ஆகியோர் எனத் தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு சென்று முகாமிட்டு, உள்ளூர் போலீஸார் உதவியுடன் மேற்கண்ட மூவரையும் கடந்த 4-ம் தேதி பிடித்தனர். தொடர்ந்து கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் இன்று கூறும்போது, “இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர்களின் பெயரில் 700-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும், 100-க்கும் மேற்பட்ட யுபிஐடிக்களையும் பயன்படுத்தி 2 நாட்களில் ரூ.2.25 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இவர்கள் இந்தூரில் ஆன்லைன் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளை பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. பொதுமக்களை போலீஸார் எனக்கூறி ஸ்கைப், வீடியோ அழைப்புகள் மூலம் அழைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE