மும்பை விபத்தில் 100 மீட்டர் தூரம் காரில் இழுத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையின் பரபரப்பான வோர்லி பகுதியில் வேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் பைக் மீது மோதியதில் அதில் பயணம் செய்த பெண் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளதாவது: மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள அட்ரியா மால் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த கார் முன்னால் சென்ற பைக் மீதுமோதியதில் அதில் பயணம் செய்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். காவேரி நாக்வா (45) என்ற அந்த பெண் மட்டும் கார் பானட்டில் சிக்கிக் கொண்டு 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சூசன் படகுத் துறையில் அந்த தம்பதி மீன்களை வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ கார் சிவசேனா (ஷிண்டே) கட்சியைச் சேர்ந்த தலைவர் ராஜேஸ் ஷாவுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. விபத்தின்போது அந்த காரில் அவரது மகன்மிகிர் ஷா, ஓட்டுநரும் இருந்துள்ளனர். கார் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டபோது நம்பர் பிளேட் அழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

புனேவில் 17 வயது மைனர் சிறுவன் போர்ஷ் காரை வேகமாக இயக்கி பைக் மீது மோதியதில் அதில்பயணம் செய்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE