சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்: கண்காணிப்பு தீவிரம்

By சி.கண்ணன்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபர்ப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை 5.30 மணி அளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்னை விமான நிலையம் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் 6 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள், சோதனைகள் நடந்து வருகின்றன. விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களில் சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வருகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இதனால், விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. வெடிகுண்டு புரளியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE