பிஹாரில் ரூ.1,500-க்கு வாங்கிய பெண் குழந்தை கோவை விவசாயிக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை: 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: பிஹாரில் ரூ.1,500-க்கு வாங்கிய பெண் குழந்தை, கோவையை சேர்ந்த விவசாயிக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. குழந்தை விற்பனை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர்அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவகம் நடத்தி வந்த பிஹாரை சேர்ந்த அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியுடன் விஜயனுக்கு நட்பு ஏற்பட்டது. தங்கள் வசம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், பிஹாரில் இருப்பதாகவும், ரூ.2.50 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை தருவதாக தம்பதி தெரிவித்தனர்.

பிஹாரில் உள்ள அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அவரதுஇளைய மகள் மேகா குமாரி ஆகியோர், பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ்குமார் தம்பதியிடம் கொடுத்துள்ளனர். விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்றனர்.

இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைல்ட் லைன்அமைப்புக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விசாரணையில் வடமாநில தம்பதி அஞ்சலி, மகேஷ்குமார கைது செய்து விசாரித்தனர். இதில், பெண் குழந்தை மட்டுமின்றி, மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவருக்கு ரூ.5 லட்சத்துக்கு விலை பேசி விற்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து குழந்தையை வாங்கியதாக விவசாயி விஜயனையும், விற்றதாக அஞ்சலியின் தாய் பூனம்தேவி, இளைய மகள் மேகா குமாரி ஆகியோரையும் கைது செய்தனர்.

விசாரணையில், பிஹாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களிடம் ரூ.1,500 ரூபாய் கொடுத்து குழந்தையை வாங்கி வந்து, கோவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE