சென்னை | தோல் பொருள் வியாபாரிகளிடம் கத்தி முனையில் ரூ.13.40 லட்சம் வழிப்பறி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரியமேடு, ராமர் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (57). இவரது நண்பர் எருக்கஞ்சேரி வடிவுடையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுலைமான் (57). இவர்கள் இருவரும் பெரியமேட்டில் தோல் பொருள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆரிப் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக ஆரிப், எருக்கஞ்சேரியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுலைமானுடன் பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண அழைப்பிதழ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கு திருமண அழைப்பிதழ் வாங்கி விட்டு, மண்ணடியில் சில பொருட்களை வாங்குவதற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கோட்டை ரயில் நிலையம் அருகே செல்லும்போது, அங்கு வேறு இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள் வழிமறித்து நிறுத்தினர். மேலும், அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, ஆரிப் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதுகுறித்து ஆரிப், எஸ்பிளனேடு போலீஸில் புகார் செய்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE