கோவையில் அடுத்தடுத்து இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

By டி.ஜி.ரகுபதி 


கோவை: சட்டம் ஒழுங்குக்கு பாதகமான செயலில் ஈடுபட்டதாக கோவையில் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(40). கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்(34) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்குக்கு பாதகம் ஏற்படுத்திய சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

அதன் பேரில், சதீஷை குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (மே 31) உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சதீஷ் கோவை மத்திய சிறையில் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டார்.

அதேபோல், மதுக்கரை போலீஸார், ரோந்துப் பணியின் போது, 11 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுக்கரையைசை் சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(64) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் ராஜேந்திரபிரசாத்தை குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார்.

அதன் பேரில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ராஜேந்திர பிரசாத்தை குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்க இன்று (மே 31) உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தும் கோவை மத்திய சிறையின் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE