புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது; மறியலால் பரபரப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஜிம் பயிற்சியாளர் கற்கலால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸ்சார் கைது செய்தனர். கொலையாளிகளின் வீடுகளை சூறையாடிய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்தவர் விக்கி (எ) மணிகண்டன் (32). ஜிம் பயிற்சியாளரான இவர் விரைவில் வெளிநாடு செல்ல இருந்தார். இதனிடையே, மணிகண்டன் தனது நண்பர் மூர்த்தியுடன் நேற்று உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் பின்புறம் உள்ள நுழைவு வாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பைக்கில் சென்றார். அப்போது, அங்கு மது போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலுக்கும், மணிகண்டனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மணிகண்டன் மற்றும் மூர்த்தியை அந்தக் கும்பல் கற்கலால் தாக்கியது.

இதில், படுகாயமடைந்த இருவரையும், ஒதியஞ்சாலை போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வம்பாகீரப்பாளையம் அசோக், திப்புராயப்பேட்டை கார்த்திகேயன், ஸ்ரீகாந்த், பத்திரிமூர்த்தி ஆகிய 4 பேரும், மணிகண்டனை கற்கலால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலையான மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் வம்பாகீரப்பாளையம் பகுதி மக்கள் ஒன்று திரண்டு சென்று, கொலையாளிகள் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட பைக்குகளும் ஒரு காரும் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து, அவர்கள் சோனாம்பாளையம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அப்போது, கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், சீனியர் எஸ்.பி-யான நாரா சைதன்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, சோனாம்பாளையம் சந்திப்பு பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE