மணல் கடத்தல் லாரியை 1 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று மடக்கிய விஏஓ

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மணல் கடத்தல் லாரியை 1 கிலோமீட்டர் தூரம் கிராம நிர்வாக அலுவலர் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டளை காவிரி ஆற்றிலிருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று மாலை கட்டளை காவிரி ஆற்றிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் - திருச்சி புறவழிச்சாலை நோக்கி சென்றது.

அந்த லாரியில் முறையான அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் ரெங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு, மோட்டார் சைக்கிளில் லாரியை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளார். மணல் லாரியை விஏஓ மறித்ததும் லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மணல் கடத்தல் லாரியை கைப்பற்றி மாயனூர் போலீஸில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்தில் விஏஓ ஸ்டாலின் பிரபு கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கடத்தல் லாரியை விஏஓ ஸ்டாலின் பிரபு துரத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE