வங்கதேச எம்.பி.யை கொல்ல கூலிப்படைக்கு ரூ.5 கோடி நண்பரே கொடுத்தது அம்பலம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த எம்.பி. படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடைய நண்பரே கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: வங்கதேச எம்.பி. அன்வருல் அசீம் கொலை சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. அசீமின் நெருங்கிய நண்பர் ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அன்வருல் அசீம் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் அந்த வீட்டுக்குத்தான் கடைசியாக சென்றுள்ளார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார். எம்.பி.யை கொல்வதற்கு பெரும் தொகை கைமாறியுள்ளது. அசீமைகொலை செய்ய அந்த நெருங்கியஅமெரிக்க நண்பர் ரூ.5 கோடி வரைகொடுத்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அப்போதுதான் இந்த கொலை சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மே 13 அன்று கொல்கத்தாவிலிருந்து மாயமான அன்வருல் அசீன் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கு விசாரணையை மேற்கு வங்க மாநில சிஐடி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE