வத்தலக்குண்டு அருகே கோயில் தேரோட்டத்தில் மோதல்; கிராமத்தில் புகுந்து மக்களை தாக்கிய கும்பல்: 12 பேர் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோயில் தேரோட்டத்தின் போது இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் கிராமத்தில் புகுந்து பொதுமக்களை தாக்கியதில் 7பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கிராமத்தில் உள்ள மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில்வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தேரோட்டத்தின் தொடக்கத்தில் சுவாமிக்கு முதலில் மரியாதை செய்வது தொடர்பாக பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், கட்டக்காமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதால், அங்கிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

கல்வீசி தாக்கிய கும்பல்: இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு பழைய வத்தலக்குண்டு மேற்குத் தெரு மற்றும் இந்திரா காலனி பகுதிக்குள் புகுந்த கும்பல், கல்வீச்சில் ஈடுபட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். மேலும்,மகீதிராம் (25) மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளையும் அக்கும்பல் சேதப்படுத்தியது. இதில் காயமடைந்தோர் திண்டுக்கல், தேனி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

100-க்கும் மேற்பட்ட போலீஸார்: திண்டுக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரதீப் அங்குசென்று விசாரணை மேற்கொண்டார். தாக்குதல் தொடர்பானபுகாரில், வத்தலக்குண்டு போலீஸார் கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் காண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE