சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு: பெலிக்ஸின் கன்டெய்னர் காட்டேஜ்களில் சோதனை

By செய்திப்பிரிவு

திருச்சி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரைநீதிமன்ற அனுமதியின் பேரில் திருச்சி ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். நேற்று மாலை அவர் நீதிபதி டி.ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சங்கர், "கோவை சிறையில் என்னை மனநலம் பாதித்தவர்களை தங்கவைக்கும் அறையில் அடைத்துள்ளனர். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே, பொது அறைக்கு மாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் அளித்த கடிதத்தை, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிபதி பரிந்துரைத்தார். பின்னர், சங்கர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, தன்னை தவறாக பேசியதாக, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜோதிலட்சுமி, கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்டெய்னர் காட்டேஜ்... இந்நிலையில், யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரிதாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேகோட்டகச்சேரி பகுதியில் பெலிக்ஸ் ஜெரால்டுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 2 கன்டெய்னர் காட்டேஜ் வீடுகளில், திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், அவரது வழக்கறிஞருடன் வந்து,"சோதனைக்கான வாரன்ட்-ஐ வாட்ஸ்அப்-ல் அனுப்பி உள்ளீர்கள். உண்மை ஆவணத்தை வழங்க வேண்டும்" என வாக்குவாதம் செய்தார். எனினும், போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி, சோதனையைத் தொடர்ந்தனர்.

பின்னர், ஜேன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த காட்டேஜ் வீடு எனது பெயரில்வாங்கப்பட்டுள்ளது.போலீஸார் ஏன் இப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனினும், சோதனையின்போது போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE