மெரினா கடற்கரை அருகே காரில் ஆயுதங்களுடன் வலம் வந்த 4 சிறுவர்களிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த 4 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை மெரினா காமராஜர் சாலை, காந்தி சிலை சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். மேலும், காரில் பய ணம் செய்த 4 சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.

உடைக்குள் மறைத்து... அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை சோதனை செய்தனர். அப்போது, 4 பேரும் தங்களது உடைக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 4 பேரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும், ராப்பீடோ டிராவல்ஸ் மூலம் காரை புக் செய்து மெரினா கடற்கரைக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த சிறுவர்களுக்கும், கார் ஓட்டுநருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதால், போலீஸார் கார் ஓட்டுநரை விடுவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சிறுவர் களிடம் இருந்த 4 கத்திகளை பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரும் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டு வந்தார்களா? அல்லது வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE