விழுப்புரம்: விபத்தில் சிக்கிய லாரியை மீட்டுத் தருவதாக பண மோசடி; செய்தியாளர் கைது

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே விபத்து வழக்கில் சிக்கிய லாரியை மீட்டுத் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய செய்தியாளரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது லாரி சில நாட்களுக்கு முன் உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து மீது உரசி விபத்தில் சிக்கியது. இது குறித்து திருநாவலுார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துள்ளான லாரி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லாரியை மீட்க ராஜேஷ், திருநாவலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது, அங்கு வந்த உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (51) தன்னை செய்தியாளர் என்றும், பணம் கொடுத்தால் போலீஸில் சிபாரிசு செய்து லாரியை விடுவித்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை ராஜேஷ் ஏற்காத நிலையில், அவரை அச்சுருத்தி ரூ.8000-ஐ யூபிஐ செயலி மூலம் செல்வராஜ் பெற்றுள்ளார். பணம் பெற்ற செல்வராஜ் லாரியை விடுவிக்க முயற்சிக்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீஸார் வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர். செல்வராஜ் திருவண்ணாமலையில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய பத்திரிகையின் செய்தியாளராக பணியாற்றி வரும் நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE