விமானத்தில் சக பயணிகளின் உடமைகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் கைது @ டெல்லி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரே ஆண்டில் 200 முறை விமானப் பயணம் மேற்கொண்டு சக பயணிகளின் உடமைகளை திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அவர் திருடியுள்ளார். அதனை போலீஸார் மீட்டுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த டெல்லி காவல் துறை துணை ஆணையர் உஷா ரங்னானி, “கடந்த மூன்று மாத காலமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடமைகளை இழந்தது தொடர்பாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தோம். இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தசரஸ் நகரில் இருந்து டெல்லி வந்த பயணியிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டன. இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாத் நகரில் இருந்து டெல்லி வந்த பயணியிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணித்த பயணிகளின் பட்டியல் போன்றவற்றை ஆராய்ந்தோம்.

அதில் ஒரே நபர் திருட்டு சம்பவம் நடந்த விமானத்தில் பயணம் செய்ததை அறிந்தோம். தொடர்ந்து அவரது தொலைபேசி எண்ணை அவர் பயணித்த விமான நிறுவனத்தின் வசமிருந்து பெற்றோம். ஆனால், போலியான எண்ணை கொடுத்து அவர் பயணித்துள்ளார். தொடர்ந்து நாங்கள் நடத்திய விசாரணையில் அவர் ராஜேஷ் கபூர் (40) என்பதை கண்டறிந்தோம்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகளை திருடுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். வயதானவர்கள் தான் அவரது டார்கெட்.

பயணிகள் தங்களை பைகளை வைக்கும் கேபினில் உள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடுவது அவரது முதல் பணி. அது நடக்காத பட்சத்தில் குறிப்பிட்ட பயணிகளை டார்கெட் செய்து, அவர்களுக்கு அருகில் அமர்ந்து பொருட்களை திருடியுள்ளார். இதற்காக ஒரே ஆண்டில் சுமார் 200 முறை அவர் விமானத்தில் பயணித்துள்ளார்.

இது அனைத்துக்கும் மேலாக திருட்டு வழக்கில் சிக்காமல் இருக்க உயிரிழந்த தனது சகோதரரின் பெயரில் அவர் டிக்கெட் பதிவு செய்துள்ளார். அவர் திருடிய பொருட்களை மீட்டுள்ளோம். அந்த பொருட்களை கரோல் பாக் பகுதியை சேர்ந்த ஷராத் ஜெயின் வசம் விற்க இருந்தார். இந்த வழக்கில் அவரையும் கைது செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE