ஜெயக்குமார் தனசிங் கொலையா, தற்கொலையா என்பதில் சந்தேகம்: தென் மண்டல ஐஜி கண்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்த வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலையா?, தற்கொலையா? எனஎதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்று, தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்மண்டல ஐஜி கண்ணன்தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் மூர்த்தி,மாவட்ட எஸ்பி என்.சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தென் மண்டல ஐஜி கூறியதாவது: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறந்து கிடந்த நிலையில், அவரதுஉடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது. கைகள், கால்கள் லூசாககம்பிகளால் கட்டப்பட்டு, உடல் கருகிய நிலையில் இருந்தது. பின்னங்கால் மற்றும் பின்பகுதி எரியாமல் இருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயிலில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது.

எந்த வழக்கிலும் இல்லாததுபோல் 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலனாய்வு நடந்து வருகிறது.உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இதுவரை கிடைக்கவில்லை. முதற்கட்ட இடைக்காலஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது. அதில் உடலில் எந்தவிதமான வெட்டுக்காயங்களும் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 32 பேரிடம் விசாரணைநடத்தப்பட்டுள்ளது. சைபர் க்ரைம், தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர் குழு என, பல்வேறு அறிவியல் ஆய்வுகளும், சோதனை களும் நடந்து வருகின்றன.

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலையா?, தற்கொலையா? என எதையும் உறுதி செய்ய முடியவில்லை. இந்தவழக்கு தொடர்பாக பல தகவல்கள்கிடைக்கப்பெற வேண்டும். ஜெயக்குமார் எழுதிய கடிதம் அறிவியல் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை உட்பட பல்வேறு அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளது.

ஜெயக்குமார் மரணத்தில் பணம்தொடர்பான பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என, பலபிரச்சினைகள் உள்ளன. குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் என, அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயக்குமாருக்கும் சட்டப் பேரவை தலைவர் அப்பாவுக்கும் பிரச்சினை இருந்ததாக கூறப்படும் நிலையில், சட்டப் பேரவை தலைவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு, “கடிதத்தில் அவர்பெயர் இருக்கிறது. தேவைப்பட் டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும்” என ஐஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE