தமிழக மத்திய சிறைகளில் 2 ஆண்டுகளில் 102 கைதிகள் மரணம்: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்

By என். சன்னாசி

தமிழகத்திலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 102 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 98 சிறைவாசிகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் கைதிகளின் இறப்பு, சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை ஆர்டிஐயில் கேட்டிருந்தார். இதற்கான தகவலை மதுரை மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்: தமிழகத்திலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 214 பேருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 98 சிறைவாசிகள் மனநிலை காப்பகத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சுமார் 10,500 பேர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறைச்சாலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை 2,349 சிறைக் கைதிகளுக்கு உடல்நிலை சரியின்றி சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. 2022 முதல் 2024 வரை 28 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 99 கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 40 பேர் மேல் சிகிச்சைக்கென சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024-ம் வரையிலும் 3,769 சிறைக் கைதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 35 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 37 சிறை கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் 2022-2024-ல் 830 சிறைக் கைதிகளுக்கு உடல்நலம் பாதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 17 சிறை கைதிகள் உயிரிழந் துள்ளனர். 33 சிறை கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு அதில், 4 சிறைவாசிகள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் சென்றனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் 2022 -2024ல் 3,570 சிறைக் கைதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 சிறை கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2 சிறைவாசிகள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மத்திய சிறைச்சாலையில் 2022 - 2024 வரை 16 சிறை கைதிகள் உயிரிழந்துள்ளனர். 38 சிறை கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 32 சிறைவாசிகள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பேகம் கூறுகையில், “சிறையில் இயற்கைக்கு மாறான மரணம் நடந்தால் சம்பந்தப்பட்ட கைதி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு ஏற்கனவே உள்ளது. நிதியுதவியை தவிர்க்கவே, சிறை மரணம் குறையும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒவ்வொரு மத்திய சிறையிலும் 2 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

இவர்களுக்கான குடியிருப்பு சிறை வளாகத்தில் இருந்தும் அவர்கள் தங்குவதில்லை என தெரிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவ உபகரணங்களே சிறை மருத்துவமனைகளில் இருக்கின்றன. ஒரு கைதி சிறை வளாகத்தில் இறந்தாலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவே நிர்வாகம் கணக்கு காட்டும் சூழல் உள்ளது. இது போன்ற நிலை மாறவேண்டும். கூடுதல் மருத்துவ வசதியை மேம்படுத்தினால் சிறை மரணங்களை குறைக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE