திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே. ஜெயக்குமார் தனசிங், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (60). கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) தனது தந்தையை காணவில்லை என்று, உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்துபுதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர். அங்கு திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் விசாரணை மேற்கொண்டார்.
» தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு; பிரஜ்வலை தேடும் பணி தீவிரம்
“இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரிய வரும்” என எஸ்பி தெரிவித்தார். மாநகர காவல் ஆணையரும், திருநெல்வேலி சரக டிஐஜியுமான (பொறுப்பு) மூர்த்தியும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். சந்தேக மரணம் என்று உவரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கடந்த 30-ம் தேதி, ஜெயக்குமார், மாவட்ட எஸ்.பி.க்கு புகார் கடிதம் அனுப்பியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.
கட்சிரீதியில் விசாரணை: திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து கட்சி ரீதியிலும் விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் ஜெயக்குமார். திருநெல்வேலியில் ராகுல்காந்தி பிரச்சாரத்துக்கு சிறப்பாக ஏற்பாடுகள் செய்து, அனைவரின் பாராட்டை பெற்றவர். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். கட்சி ரீதியாகவும் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago