மதுரை ரயில்வே காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

By என். சன்னாசி

மதுரை: மதுரை ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும் ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு கடந்த வாரம் அடுத்தடுத்து இரு கடிதங்கள் பதிவு தபால் மூலம் வந்துள்ளன. இவற்றை அதிகாரிகள் பிரித்து படித்த போது, ரயில் நிலைய பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் போன்ற மிரட்டல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதைக்கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உயர் அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இக்கடிதங்களை ஆய்வு செய்தபோது, அனுப்பியவர் மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த விஏஒ ஒருவரது பெயர், முகவரி, மொபைல் எண் இடம் பெற்றிருந்தது. அதில் சந்தேகம் எழுந்த நிலையில், தனிப்படைகளை அமைத்து சம்பந்தப்பட்ட முகவரியில் விசாரித்தபோது, விஏஓ பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பியவர் மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர், அவ்வையார் தெருவைச் சேர்ந்த குமரேசன் (60) என்பது தெரியவந்தது. அவர் சில நாளாகவே தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீஸார் பிடித்தனர்.

விசாரணையில், ஏற்கெனவே மானாமதுரை ரயில் நிலைய ரயில்வே போலீஸாருக்கும், திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் அனுப்பி இருப்பதும், தனக்கு பிடிக்காதவர்களின் பெயர்களில் மிரட்டல் கடிதங்கள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு பிடிக்காதவர்களின் பெயர்களில் இது போன்ற மிரட்டல் கடிதங்களை காவல் நிலையம் போன்ற அரசுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE