உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை - இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: உடல் பருமனைக் குறைக்க நடந்தஅறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஎம்எஸ் இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருவள்ளூர் நகர் புதுப்பாளையம் வீதியைச் சேர்ந்தவர் ஹேமச் சந்திரன் ( 26 ). 156 கிலோ உடல் எடை கொண்ட ஹேமச் சந்திரன், தனது உடல் எடையை குறைக்க பல வகையில் முயற்சி செய்துவந்துள்ளார். இதற்கிடையே, உடல் எடையை குறைப்பது குறித்து சென்னை தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் யூடியூப்பில் பேசிய வீடியோவை பார்த்து அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ரூ.4 லட்சம் செலவில் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை பம்மலில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி காலையில் அறுவை சிகிச்சை தொடங்கிய 45 நிமிடங்களில் ஹேமச் சந்திரன் உயிரிழந்து விட்டதாக பெற்றோரிடம் டாக்டர் தெரிவித்துள்ளார். ஹேமச் சந்திரனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவில்லை. மற்றும் உடலில் மயக்க மருந்து செலுத்துவதற்கு முன்மேற்கொள்ளப்படும் பரிசோதனையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் டாக்டரின் தவறான சிகிச்சை மற்றும் போதிய வசதியில்லாத மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தது தான் உயிரிழப்புக்குக் காரணம் என பெற்றோர் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரும் சமரசமாகச் சென்று விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹேமச் சந்திரன் உயிரிழப்பு குறித்து, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்கம் ( டிஎம்எஸ் ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, 2 இணை இயக்குநர்கள், மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிஎம்எஸ் இயக்குநர் இளங்கோ மகேஷ்வரன் கூறும்போது, ‘‘சம்பவம் குறித்து விசாரிக்க, இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் விசாரணை அறிக்கைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE