மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 5,000 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல் @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் சுங்கத்துறை சோதனையை முடித்துக் கொண்டு வெளியே சென்றனர். ஆனால், கன்வேயர் பெல்ட்டில் 2 சூட்கேஸ்கள் மட்டும் யாரும் எடுக்காமல் கேட்பாரற்று இருந்தன.

மெட்டல் டிடெக்டர் சோதனை: இதை பார்த்த விமான நிலையபாதுகாப்பு அதிகாரிகள், சூட்கேஸ்களில் வெடி குண்டு ஏதாவது இருக்குமா என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். அதில், வெடி குண்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், சூட்கேஸ்களை திறந்து பார்த்தனர். அதில், சிவப்பு காதுகள் கொண்ட 5 ஆயிரம் அரிய வகை நட்சத்திர ஆமைக் குஞ்சுகள் இருந்தன.

அவற்றை கைப் பற்றிய அதிகாரிகள், பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆமைக் குஞ்சுகள் மூலம் வெளி நாட்டு நோய்க் கிருமிகள் இந்தியாவில் பரவும் வாய்ப்புள்ளதால், அவற்றை மலேசியாவுக்கு திருப்பிஅனுப்ப மத்திய வன உயிரின பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திருப்பி அனுப்பிவைப்பு: அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆமை குஞ்சுகள், நேற்று மலேசியா சென்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டன. மலேசியாவில் இருந்து ஆமை குஞ்சுகளை கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE