கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளை: வடமாநில கும்பலுக்கு தனிப்படை போலீஸ் வலை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் திருடியது வட மாநில கொள்ளைக் கும்பல் எனத் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 6-ம் தேதி நுழைந்த மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனர். முதலில் ரூ.10 லட்சத்துக்கு மேல் திருடு போயிருக்கும் என கணிக்கப்பட்டது. விசாரணையில், ரூ.20 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி சங்கு, டிஎஸ்பிக்கள் தமிழரசி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸார் கூறியதாவது: ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கன்டெய்னர் லாரியில் தமிழகம் வந்துள்ளனர். பின்னர் , சரக்கு வாகனத்தைத் திருடி, அந்த வாகனத்தில் குருபரப்பள்ளிக்கு வந்து அங்குள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரதை உடைத்து பணத்தைத் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், திருட பயன்படுத்திய சரக்கு வாகனத்தை திருடு நடந்த பகுதியிலிருந்து சிறிது தொலைவில் நிறுத்தி விட்டு, மீண்டும் கன்டெய்னர் லாரியில் தப்பியுள்ளனர்.

கன்டெய்னர் லாரி ஸ்ரீபெரும்புதூர், சென்னை வழியாக தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றிருப்பது சுங்கச் சாவடிகளில் உள்ள கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக தெலங்கானா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அம்மாநில போலீஸார் அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாகக் கொள்ளையர்கள் சென்ற கன்டெய்னர் லாரி, சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றதோடு, சிறிது தூரத்தில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தற்போது, கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரி மற்றும் கடத்தலுக்காக கொள்ளையர்கள் திருடி பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஹரியானா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE