சென்னை | துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை தராததால் ‘குருவி’யை அறையில் அடைத்து சித்ரவதை செய்த 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை கொடுக்காமல் தலைமறைவானவரை கண்டுபிடித்து அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸார்கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோபால பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சுக்கூர் (45). இவர், சென்னையைச் சேர்ந்த ஜாசிம் என்பவரிடம் குருவியாக (வெளிநாட்டுக்கு சென்று சட்ட விரோதமாக தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கடத்திவருபவர்) வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.20 லட்சத்தை ஜாசிமிடமிருந்து பெற்றுக் கொண்டு தங்கம், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவருவதாகக் கூறி துபாய் சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து சென்னை திரும்பியவர் வாங்கிவந்த பொருட்களை ஜாசிமிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். பின்னர், அவர் திண்டிவனத்தில் லாட்ஜ் ஒன்றில் இருந்துள்ளார். இதையறிந்த ஜாசிம்தன்னிடம் வேலை செய்த திருச்சியைச் சேர்ந்த கார் ஓட்டுநர்குணா (23), அதே மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த முகமதுஅர்ஷத்(24) ஆகியோரை அனுப்பி, அப்துல் சுக்கூரை அழைத்து வரச் சொன்னார்.

இதையடுத்து திண்டிவனம் சென்ற இருவரும் அப்துல் சுக்கூரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்னை திருவல்லிக்கேணி அழைத்து வந்து அறையில் அடைத்து வைத்து, பணம் கேட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். தகவல் அறிந்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து அப்துல் சுக்கூரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், குணா, முகமதுஅர்ஷத் இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்த வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக அவர்கள் அறையிலிருந்து ரூ.4 லட்சம் மற்றும் வெளிநாட்டுப் பணம், போலியான ஆதார் கார்டுகள், 28 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய ஜாசிமை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE