போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரூ.2,000 கோடி மதிப்பிலான, போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப் படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களை் கைப் பற்றினர். மேலும், அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஜாபர் சாதிக் தரப்பில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து, ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் நேற்று அகற்றப்பட்டது. தொடர்ந்து, ஜாபர் சாதிக் சகோதரர் சலீம், ஜாபர் சாதிக் மனைவி ஆகியோர் வீட்டைத் திறந்து, உள்ளே சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE