தலைமறைவான விஐபிஎஸ் குழுமத்தின் நிறுவனர் வினோத் குடேவுக்கு சொந்தமான ரூ.24.41 கோடி சொத்து முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைமறைவாக உள்ள துபாயைச் சேர்ந்த விஐபிஎஸ் குழுமத்தின் உரிமையாளர் வினோத் குடேவுக்கு சொந்தமான ரூ.24.41 கோடி சொத்துகளை பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

58 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.21.27 கோடியும், டெபாசிட்டாக இருந்தரூ.3.14 கோடியும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாய்க்கு தப்பிச் சென்ற குடே, கானா கேபிடல் மூலம் கிரிப்டோ மற்றும் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், அவர் விஐபிஎஸ்வாலெட், விஐபிஎஸ் செக்யூரிட்டீஸ் போன்ற பல நிறுவனங்களை தொடங்கி சட்டவிரோத நிதி பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார்.ஹவாலா மற்றும் கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்தி ஷெல் நிறுவனங்கள் மூலம் துபாய்க்கு பணத்தை மடைமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களின் பணம்ரூ.100 கோடிக்கும் மேல் ஏமாற்றப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரான பாரதி வித்யாபீத் என்பவர் அளித்த புகாரின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு முன்னதாக, வினோத் குடேவின் துபாய் வர்த்தகத்துடன் தொடர்புடைய ரூ.37.50 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக இதுவரை மொத்தம் ரூ.61.91 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE