சென்னை | ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளிவிட்டு கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: ஓடும் ரயிலிலிருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு பாட்னா சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் நேற்று முன்தினம் (ஏப்.2) மாலை புறப்பட்டது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக (டி.டி.இ.) பணியில் இருந்தார். எர்ணாகுளம் முதல் ஈரோடு வரை பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவர் ஒவ்வொரு பெட்டிகளிலும் டிக்கெட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எஸ்-11 பெட்டியில் டிக்கெட் பரிசோதனை செய்யச் சென்றபோது, அங்கு வட மாநில தொழிலாளர்கள் அதிகமாகப் பயணித்திருக்கிறார்கள். அதில் சிலர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ரயிலின் வாசலுக்கு அருகே நின்றிருந்த அவர்களிடம் டிடிஇ வினோத் டிக்கெட் கேட்டபோது தகராறு செய்தார்கள்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வடமாநில தொழிலாளி ஒருவர், டிடிஇ வினோத்தை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அந்த நேரத்தில், எதிரில் வந்த மற்றொரு ரயில் வினோத் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஓடும் ரயிலிலிருந்து போதை ஆசாமியால் தள்ளிவிடப்பட்டு கே.வினோத் அகால மரணம் அடைந்தார். கொலையாளிகள் மீது கடுமையான வழக்குப் பதிவு செய்து, தக்க தண்டனை வழங்க வேண்டும்.

பணியில் இருக்கும் டிடிஇ-க்கு துப்பாக்கி ஏந்திய காவலரை பாதுகாப்புக்கு வழங்க வேண்டும். அதிக பெட்டிகளை பார்க்கக் கூறி டிடிஇ-க்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. கடுமையான சட்டங்கள், தொடர் பரிசோதனை மூலம் முறையற்ற வகையில் பயணம் செய்யும் நபர்கள், குடிகாரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதுபோல, தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டிக்கெட் பரிசோதகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE