பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளியின் புகைப்படம், வீடியோ ஆகிய‌ ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், அவரை பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிப்பிடத்தில் குற்றவாளி தனது தொப்பியை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் அந்த தொப்பி வாங்கப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்பு உடையவர்களாக சந்தேகிக்க‌ப்படும் 2 பேர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி இருந்தும் உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: 3 மாநிலங்களில் நடந்த சோதனையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பெங்களூரு உணவகத்தில் குண்டு வைத்தவர் முசாவீர் சாஹிப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான சதி திட்டம் தீட்டியவர் அப்துல் மதீன் தாஹா என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஆயுதங்களை வாங்கித் தந்த முஷ‌ம்மில் ஷெரீப், கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர். அவரை என்ஐஏ அதிகாரிகள் 28-ம் தேதி இரவு கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரில் ஆஜராக நோட்டீஸ்: இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த10 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE