ம.பி. சிறையில் தொழில்நுட்பத்தை கற்று ரூ.200 கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது

By செய்திப்பிரிவு

விதிஷா: மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபேந்திர சிங் தாக்கத் (35). இவர் மீது கொலை உள்ளிட்ட 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் தண்டனைகாலத்தின்போது சிறையில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் அச்சுத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் சிறையிலிருந்து வந்ததும் அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்து மார்க்கெட்டில் புழக்கத்தில் விட்டுள்ளார் பூபேந்திர சிங் தாக்கத்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 95-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும், அச்சுக்குப் பயன்படுத்தப்பட்ட கலர் பிரிண்டர், 6 இங்க் பாட்டில்கள், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட காகிதம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிரோஜ் போலீஸ் சப்-டிவிஷனல் அதிகாரி உமேஷ் திவாரி கூறும்போது, “சிறையில்தான் அவர் அச்சுத் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டுள்ளார். சிறையிலிருந்து வந்த சில நாட்களிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார். கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE