தமிழகத்தில் ஒரு மாதத்தில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 402 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 402 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனையை தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 15-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 402 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 1,827 கிலோ கஞ்சா, 400 கிராம் மெத்த குலோன், 130 கிராம் மெத்த பெட்டமைன், 250 கிராம் ஆம்பெட்டமின், 150 கிராம் சூடோ பெரின், 1,384 பையீவோன்ஸ் பாஸ்பினாஸ் மாத்திரைகள் மற்றும் 130 நிட்கோர் மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2.02 கோடி எனவும், போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், போதைப் பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 10581, வாட்ஸ் அப் எண் 9498410581 அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE