சென்னையில் 20 ரவுடிகள் பிடிபட்ட விவகாரம் | ரவுடிகளுக்கு துப்பாக்கி விற்றவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ரவுடிகளுக்கு துப்பாக்கிகளை சட்ட விரோதமாக விற்ற பிஹார் துப்பாக்கி வியாபாரியை சென்னை தனிப்படை போலீஸார் அங்கு சென்று கைது செய்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல் துறையின் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு திருமங்கலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில்ரவுடி கும்பல், எதிர் தரப்பினரை கொலை செய்யும் திட்டத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக 2 தினங்களுக்கு முன்பு தகவல்கிடைத்தது.

இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து துப்பாக்கி முனையில் 20 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 நாட்டுத் துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 11 கத்தி மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அரக்கோணம் ஜெயபால் (63), நெல்லை மாவட்டம், நாங்குநேரி சொக்கலிங்கம் என்ற சுரேஷ் (24), அதே மாவட்டம் ராமன்பட்டி முத்துக்குமார் என்ற மதன் (30) ஆகிய 3 ரவுடிகள் முக்கியமானவர்கள். இந்த 3 பேரும் 2023-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 2024 மார்ச் முதல் வாரத்தில் சிறையிலிருந்து நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் கேங்ஸ்டர்களாக செயல்பட்டுள்ளனர். ரவுடி ஜெயபாலுக்கு எதிராக 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்றொரு ரவுடி சொக்கலிங்கத்துக்கு எதிராக 2 கொலை வழக்குகள் உள்ளன. முத்துக்குமார் மீதும் 3 கொலை வழக்குகள் உள்ளன.

இவர்கள் பிஹார் மாநிலத்தில் உள்ள இஸ்மாயில் என்ற துப்பாக்கி வியாபாரியிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர். முதல் இரு துப்பாக்கிகளை ரூ.4 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். அதற்காக இஸ்மாயில் ஒரு துப்பாக்கியை இலவசமாகக் கொடுத்துள்ளார். மேலும், இன்னொரு துப்பாக்கியை ரூ.1 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர்.

மற்றொரு முக்கிய ரவுடியான (கேங்ஸ்டர்) தம்பிராஜன் (8 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்) என்பவரையும் கைது செய்துள்ளோம். அவர் மீது 5 கொலை,6 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 14 பிற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் 5 ஆண்டுகள் பிஹாரில் இருந்துள்ளார். இவர் மூலமே துப்பாக்கிகள் வாங்கி சட்ட விரோதமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை போலீஸாரின் தீவிர மற்றும் தொடர் கண்காணிப்பாலும், துரித நடவடிக்கையாலும் கொலை சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்ற கொடும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட எண்ணும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே, ரவுடிகளை ஏ, ஏ பிளஸ், பி, சி என வகைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். ரவுடிகளை பருந்து செயலி மூலமும் கண்காணிக்கிறோம். இதற்காக 3 தனிப்படைகள் உள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்யவும், இதுபோல் இனி மிரட்டல் விடுக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், துப்பாக்கி வியாபாரியை தனிப்படை போலீஸார் பிஹார் சென்று கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க ரவுடிகளை கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), இணை ஆணையர்கள் விஜயகுமார், அபிஷேக் தீக் ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட எண்ணும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்