தெரு நாய்கள் துரத்தியதால் சுவர் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு - ஏனாமில் சோகம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தேள் கடித்த தந்தையை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பும்போது, தெரு நாய்கள் துரத்தியதால் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் தீயணைப்புத் துறையில் ஓட்டுநராக சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தீயணைப்பு குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது இன்று அதிகாலை தேள் கொட்டியது. இதனால், அவரின் மகன் மோகன் கிருஷ்ணா (19) அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சைக்காக அனுமதித்து விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து மோகன் கிருஷ்ணாவை துரத்தின. இதில் பயந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி, அருகே இருந்த தீயணைப்புத் துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரில் மோதி தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட மோகன் கிருஷ்ணாவுக்கு, அவர் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்காக காக்கி நாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த மோகன் கிருஷ்ணா ஏனாமில் உள்ள அம்பேத்கர் அரசு பாலி டெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு இசிஇ படித்து வந்தார். மாணவர் மரணத்தையொட்டி பாலிடெக்னிக் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த மோகன் கிருஷ்ணாவுக்காக சக கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, விபத்து குறித்து ஏனாம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE