சென்னை | விமானம் மூலம் உணவு பொருட்களுக்குள் பதுக்கி தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து மகன் அனுப்பி வைக்கும் கஞ்சா பார்சலை பெற்று, சென்னையில் தனித்தனியாக பிரித்து விநியோகித்து வந்த தந்தை உட்பட 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் உயர் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முதல்கட்டமாக, சென்னையை அடுத்த மாங்காடு ரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரது மகன் கார்த்திக், தாய்லாந்தில் இருப்பது தெரியவந்தது.

கார்த்திக்கும், அவரது நண்பர் இளையான்குடியை சேர்ந்த இப்ராஹிமும் சேர்ந்து, தாய்லாந்தில் உள்ள உயர் ரக கஞ்சாவை, பயணிகள்போல் வரும்நபர் (குருவி) மூலம் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதும், அந்த கஞ்சா பார்சலை சண்முகராஜ் வாங்கி, மகன் சொல்லும் நபர்களுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

சுற்றுலா பயணி போன்று... சண்முகராஜ் கொடுத்த தகவலின் மூலம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த மற்றொரு நபரான யாசர் அராபத் (34), அவரது கூட்டாளி ராயப்பேட்டையை சேர்ந்த முஹம்மது ஜைனுல் ரியாஸ் (30)ஆகியோரும் சிக்கினர்.

யாசர் அராபத், சுற்றுலா பயணி போன்றுதாய்லாந்து சென்று, உயர் ரக கஞ்சா பார்சலை பெற்றுக்கொண்டு சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். பின்னர், தனியார் பேருந்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்து சண்முகராஜிடம் கஞ்சா பார்சலை சேர்த்துள்ளார். கஞ்சா பொட்டலங்களாக முஹம்மது ஜைனுல் ரியாஸ் (34) பிரித்துக் கொடுக்க, அவற்றை கொண்டு சென்று சண்முகராஜ் விநியோகம் செய்துள்ளார்.

இதையடுத்து, சண்முகராஜ், யாசர் அராபத், முஹம்மது ஜைனுல் ரியாஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.51 கிலோ உயர் ரக கஞ்சா (மதிப்பு ரூ.50 லட்சம்), ஒரு கார், 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகர் துணை ஆணையர் தலையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர் கைது: அதேபோல, மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் (53), கனி (26), சிக்கந்தர் (40), ராமநாதபுரம் ஜெகன் (40), சிவகங்கை ஆனந்த முருகன் (37), திருச்சி ராதாகிருஷ்ணன் (39) ஆகிய 6 பேரை கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை ஏழுகிணறு தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ராதாகிருஷ்ணன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் என்பதும், சிக்கந்தர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளமேன்ஷன் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE